Raja Gopurams in Nov-2011

குமர கோயில்


மெய்கண்டமூர்த்தி சுவாமி திருக்கோயில் - நாகப்பட்டிணம்  
காலம் முழுதும் கந்தற்கே கவிகள் அறைந்த்துய்த் தவரென்றிஞ், ஞாலம் இறைஞ்சும் அருணகிரி நாதர் திருவாய் மலர்ந்தநறும்,
சீலம் மிகுசந் தக்
கவிகள் தெரித்துப் பரவி மெய்கண்ட, வேலன் அருளுக்காளான மேலோர் பலர்வாழ் வதுநாகை

அருட்கவி அழகுமுத்து புலவர் இயற்றிய மெய்கண்ட வேலாயுத சதகம்

        விநாயகர் காப்பு

       பின்முடுகு வெண்பா

காலா யுதத்தான்மெய் கண்டவே லாயுதன்மேல்
வேலா யுதச்சதக மேயுரைக்கச் சேலார்கண்
கும்பதனச் சம்பிரமக் கொம்பிமயத் தம்பிகைசொற்
கம்பமதத் தும்பிமுகன் காப்பு

        திருநூல் பகுதி

       கலிவிருத்தம் – பிரிந்திசை வண்ணம்

1      பொன்பூத்தநூ புரப்பாதமும் புரிபூத்தமார் பீராறுதோள்
முன்பூத்தகண் முன்னான்குடன் முடியாறுகை வடிவேலுமாய்
கொன்பூத்த வென்னிதயத்திலே குடிகொண்டருள் கூர்வாய்குற
மின்பூத்தபா காசண்முகா வேலாயுதா வேலாயுதா

2      கனவுக்குளே நீவந்தெனைக் கலையோதெனக் கற்பித்ததும்
நினைவுக்குளே கண்டேனலால் நினைவுக்கது நிசமல்லவே
சுனையுற்றநீர் நிழலல்லவே தோன்றாத்துணை யாய்நின்றிடு
வினையத்தை யென்சொல்வேனையா வேலாயுதா வேலாயுதா

3      பன்னாளெனு மூவொன்பதிற் பதின்மூன்றுநாள் பதினேழுநாள்
இன்னாளினி யின்னாளையே யென்பாரிவை யெந்நாளுமே
உன்னாளெனத் திரிவேனினி யொருநாளுமே திருநாளுமாய்
மின்னாளிடப் பாகன்றரும் வேலாயுதா வேலாயுதா

4      உனையேதெய்வ மாதாபிதா வுபதேசசற் குருவென்றுநான்
நினையே னவாவொழியே னெறிநில்லேன் றிருவெண்ணீறுமே
புனையேனேரா றெனுமந்திரம் புகழேனலோ திகழ்வானவர்
வினையேசெய்வஞ் சனையாளுவாய் வேலாயுதா வேலாயுதா

5      பனைதீர்த்தவன் சிறைதீர்த்தவன் பழிதீர்த்தவன் பகைதீர்த்தவன்
கனைதீர்த்தவன் மறைதீர்த்தவன் கலிதீர்த்தவன் கருதார்கள்வஞ்
சனைதீர்த்தவன் முனைதீர்த்தவன் தமிழ்தீர்த்தவன் றமிழ்ப்பாண்டியன்
வினைதீர்த்தவன் நீயல்லவோ வேலாயுதா வேலாயுதா

6      கானக்கொடி வலமாகியுன்கண் ணன்கொடி யிடமாகியுன்
சூனக்கொடி யவர்பால்வரும் சோழன்கொடி போய்சீறுவாய்
வானக்கொடி யிடனாவினன் வாகைக்கொடி தாளுங்குடர்
மீனக்கொடி யானென்பனோ வேலாயுதா வேலாயுதா

7      ஒறுப்பார்களுக் கொருநாட்பல னேங்காரமா மாங்காரமே
பொறுப்பார்களுக் கானாலுமிப் புவிமட்டுமே புகழென்றுதான்
மறுப்பாடிலாக் குறள்சொல்லிய வகைகண்டுமே வன்மத்தினால்
வெறுப்பார்களுக் கென்னோபலன் வேலாயுதா வேலாயுதா

8      எறும்பானையீ றெடுத்தேனுட லின்னம்பிறப் பொழிந்தேனிலை
உறும்பாவமென் போற்செய்தபே ருலகத்தொரு வருமில்லையே
நறும்பாலினெய் போற்கல்வியும் ஞானத்தையும் நல்காவிடில்
வெறும்பாலடை யமுதாகுமோ வேலாயுதா வேலாயுதா

9      எறிக்குஞ்சுடர்த் தீபத்தையே யேற்றும்பொழு திருளானதைப்
பறிக்குஞ்சுடர் தானென்றதைப் பார்த்தோருடைப் படலத்தையே
மறிக்கும் மிடமது கண்டலோ மாயைக்குநீ வகைசொல்லுவாய்
வெறிக்கும் புயதயாபரனே வேலாயுதா வேலாயுதா

10     நீறிட்டவர் முகபங்கயம் நித்தந்தரி சித்தாற்பலம்
மாறிட்டம ருலகாளுவார் மறுஜென்மமும் வாராதென
வேறிட்டசே வுடையார்மழு வேற்கின்றது மிதற்கல்லவோ
வீறிட்டநீ றனுபூதிதான் வேலாயுதா வேலாயுதா

11     ஆளாமைபோ லடங்காமலே யஞ்சாமையா யறியாமையாய்
வாளாமை நேத்திரமேபெறு மானார்கள்மேல் மயலாகியே
தாளாமையே செய்தேனலாற் றன்மந்தலை காப்பாமெனு
வேளாமையே செய்தேனிலை வேலாயுதா வேலாயுதா

12     அளக்கிற்பெருங் கடலைக்கர மடக்குமுனி கயத்தாமையா
யிளக்கிற்கலை போதித்தநீ யெமக்கெப்படிப் போதித்திடில்
துளக்கிற்புனல் வாகாளுமே சொல்லத்தகு மெய்ஞ்ஞானமும்
விளக்கிற்கொளுந் தீபந்தமாம் வேலாயுதா வேலாயுதா

13     துளாவுமதிப் பிடிதோணிமேற் றூரத்தினிற் செல்வோமென
அளாவுமனம் பேராசையி லளந்தத்தையே யளப்பாயது
களாவின்கனி மையானதுங் காய்நின்றபின் கனியுண்மையாம்
விளாவின்கனி கனியல்லவோ வேலாயுதா வேலாயுதா

14     தளையும்பெருங் குடும்பச்சுமை தாங்காது தத்தளித்தால்வழி
யுளையும்சறுக் கலுமாகினா லுத்தியோகமெப் படிச்செய்குவேன்
அளையுங்கலை தெரிகல்வி யொன்றற்றா லினியானாள்வனோ
விளையும்பயிர் முளைசொல்லுமே வேலாயுதா வேலாயுதா

15     வள்ளற்சடை மீதேறியே மதித்தோணியாய் மாமக்கரா
வெள்ளப்படாத் துடுப்போடு கொக்கிறகென்னும் பாய்முறைதூக்கியே
பள்ளப்புனற் பாகீரதிப் பாவைக்குளே பாலாழியாம்
வெள்ளத்தினில் விளையாடுவாய் வேலாயுதா வேலாயுதா

16     வளர்கின்றமா மறைநான்முகன் மாலீசனும் வகையாகவே
யளக்கின்றமுக் காணிக்குநீ யருக்காணியாய் யாவர்க்குமே
வுளக்கண்ணிருப் பதையெண்ணிலா ரூரூர்தொறு முழல்வாரவர்
விளக்கன்றியே தீத்தேடுவார் வேலாயுதா வேலாயுதா

17     கொளூர்வரா கமுமூரவே கூறுங்கர ணமும்யோகமும்
நாளூர்வதுந் திதியூர்வது நமனூர்புகும் நாளல்லவோ
வாளூர்விழிக் குறமாதுதெய் வானைத்திரு மயில்பாகனே
வேளூரானே வயலூரானே வேலாயுதா வேலாயுதா

18     வள்ளிக்குநே ரிடையார்க்குமொள் வாளுக்குநேர் விழிநாசிகை
எள்ளுக்குநேர் மொழியார்க்குமவ் வீசன்விழியால் வெங்குறை
கொள்ளிக்குள மெலியாமலே கூர்வாயருள் கொம்பின்றிலா
வெள்ளிக்குநா யகசுந்தரா வேலாயுதா வேலாயுதா

19     உள்ளானைமெய் யுரையானைமா லொழியனைவீண் பழியானைபொய்
தள்ளானை வஞ்சகத்தானைநொய் தவிழானைப்பா தகத்தானர
கொள்ளானைவொன் றறியானை நின்றேத்தானைநீ ரெட்சித்திடாய்
வெள்ளானைமா முகத்தான்றுணை வேலாயுதா வேலாயுதா

20     நாளைக்கிருப் போமென்பதும் நம்பிக்கையோ நற்சந்தன
வாளைக்களந் தனில்வைத்திடும் வாறல்லவோ மாய்கின்றநாள்
காளைக்கடா வினிலேறிவெங் கட்காலனார் கடினஞ்செய்யும்
வேளைக்குநீ துணையாகுவாய் வேலாயுதா வேலாயுதா

21     கோளொன்றுமே சொல்வார்புகழ் கொள்ளாரையுங் குன்றெப்பதாந்
தோளொன்றுநம் துரையென்றுசெஞ் சுடரென்றுநீ துணையென்றுபொற்
றாளென்றுசொன் னதுமன்றியே சற்றும்பய மில்லாதுசெவ்
வேளென்றபா தகமென்றுபோம் வேலாயுதா வேலாயுதா

22     எள்ளாடுசெக் கைப்போலவு மீக்காலையா டற்போலவுங்
கள்ளாடுபூ மணம்வண்டுபோற் காப்பாற்றுயிர் கவர்வானெமன்
பள்ளாடு வேளையில்வந்து காபலதெய்வ நின்னிகர்வெய்துமோ
வெள்ளாடரிப் போலாகுமோ வேலாயுதா வேலாயுதா

23     வளையாடமே கலையாடநூல் வடமாடநூ புரமாடவே
கிளையாடவே கொடியாடவே கிளியாடவே யளிபாடமர்
தளையாடவே நடமாடுமா தரைமேவுகா மியையாளுவாய்
விளையாடுமா மயில்பாகனே வேலாயுதா வேலாயுதா

24     நீளாமலே வினைகாலமும் நேராமலே நிரையத்தலம்
ஆளாமலே பொறியாலுள மலையாமலே யனல்வாயுடல்
மாளாமலே மாண்டாலுனை மறவாமலே மறுஜென்மமும்
மீளாமலே யெனையாளுவாய் வேலாயுதா வேலாயுதா

25     சூழாமலே கலிதீவினை தொடராமலே படர்நல்வினை
யாழாமலே யயனாருருப் பண்ணாமலே பெண்ணாசையா
லாழாமலே யமதூதர்வந் தணுகாமலே நரகத்தின்வாய்
வீழாமலே யெனையாளுவாய் வேலாயுதா வேலாயுதா

26     அழலுக்கிடும் விறகாகுமென் றறியாமலே பொறிமாதர்கள்
குழலுக்கிடும் மலர்யாவையுங் கொண்டேகியுன் தண்டாமரைக்
கழலுக்கிடும் வகைசற்றுமே கருதாமலென் புருடாயுளும்
விழலுக்கிடும் புனலாகுமோ வேலாயுதா வேலாயுதா

27     வழியாயிரங் காட்டாமலோர் வழியாயிரங் கரைசெய்குவாய்
பொழியாயிரம் பேராயுனைப் புகழத்தொழத் தெரிசிக்கவே
மொழியாயிரம் நன்னாவுடன் முளரிக்கர மோராயிரம்
விழியாயிரம் பெற்றேனிலை வேலாயுதா வேலாயுதா

28     பூவாகியுன் னடிசார்ந்திலேன் பொடியாகியுன் மெய்தீண்டிலேன்
பாவாகியுன் பேர்தாங்கிலேன் பணியாகியுன் புயமாகிலேன்
றேவாகியுன் படையாகிலேன் சேயாவடி யேனுய்வனோ
மேவாதசூரனை வென்றவா வேலாயுதா வேலாயுதா

29     தவத்துக்குடம் பெடுத்தேனிலை தாரித்திரத் தோற்றத்துட
னவத்துக்குடம் பெடுத்தேன்பிணி யாசைக்குடம் பெடுத்தேனறும்
பவத்துக்குடம் பெடுத்தேன்பிறர் பழிப்புக்குடம் பெடுத்தேன்மன
விவத்துக்குடம் பெடுத்துய்வனோ வேலாயுதா வேலாயுதா

30     காலாயுதா வாசாலகா காபாலிசே யாபூதரா
சீலாவிசா காதாபரா தேவாதிபா சேனாதிபா
நாலாகலா கோலாகலா ஞானோதயா வேதோத்தமா
மேலானவா நாகாபுரா வேலாயுதா வேலாயுதா

31     மாலென்றுமென் னிடமாகையால் மடவார்கள்கண் வாளென்றுசெஞ்
சேலென்றுமைக் கடலென்றுமத் தேனென்றுமம் மானென்றுவெங்
கோலென்றுசொன் னதுமன்றியே குணகீனனான் கூசாமலுன்
வேலென்றபா தகமென்றுபோம் வேலாயுதா வேலாயுதா

32     வல்லங்கமா முலைகாட்டியும் வாளங்கமாம் விழிகாட்டியு
மல்லங்கமாங் குழல்காட்டியு மமுதங்கமா மொழிகாட்டியும்
பல்லங்கமாம் நகைகாட்டியும் பங்கப்பரத் தையர்செய்திடும்
வில்லங்கமே தீர்த்தாளுவாய் வேலாயுதா வேலாயுதா

33     கல்லாதவன் றுதியாதவன் கருதாதவன் கற்றோர்கள்பாற்
செல்லாதவன் பணியாதவன் றெளியாதவன் செவியாதவன்
பொல்லாதவன் பூணாதவன் பூசாதவன் புலனைந்தையும்
வெல்லாதவ னினியுய்வனோ வேலாயுதா வேலாயுதா

34     விலங்கைவலி யம்மென்றடி மேலர்ச்சனை செய்யாக்கொடு
விலங்கைப்புரப்ப துமுன்கடன் மிகவெம்பினே னுனைநம்பினேன்
விலங்கைச்செ யம்பெறுசூரனை வென்றவிபூ தர்கள்காவினில்
விலங்கைத்த றித்திடுகந்தனே வேலாயுதா வேலாயுதா

35     மாலுக்கிணை தானாகியே வழங்காதவன் வயிறோபெருஞ்
சாலுக்கிணை தானானவன் றருவாரையுந் தடைசெய்குவே
னாலுக்கிணை யாய்நல்கிடா தளிக்குந்தரு விக்குந்தடை
வேலுக்கிணை தானவனோ வேலாயுதா வேலாயுதா

36     சேலுக்குவேல் வாளுக்குமை திளைக்குங்கரு விளைக்குமது
காலுக்குநீள் கடலுக்குமக் கடுவுக்குவெமா வடுவுக்குவெங்
கோலுக்குமங் குடங்கைக்குநற் குவளைக்குமா னெமனுக்கும்வை
வேலுக்குநேர் விழிவள்ளிசேர் வேலாயுதா வேலாயுதா

37     மாலைப்பிறை போற்செல்வமும் வளராமலே வறுமைத்துயர்
காலைக்கதி ரெழுமுச்சியிற் கனலொத்திடுங் கடினத்தினால்
ஆலைக்கிடுங் கழையாகினே னழலுக்கிடு மெழுகாகினேன்
வேலைக்கிடுந் தூறாகினேன் வேலாயுதா வேலாயுதா

38     தோலுந்துணை யென்புந்துணை துணையாகையால் துணையாகிய
காலுந்துணை கையுந்துணை கண்ணுந்துணை கண்புக்கெலா
மாலுந்துணை யதுபோல்வரு மாதங்கநேர் போதிலுன
வேலுந்துணை மயிலுந்துணை வேலாயுதா வேலாயுதா

39     தலைக்கப்புற மோடும்புனல் சாணோடியென் முழமோடியென்
மலைக்கப்புற முயர்பாவமும் வளர்ந்தாலுயும் வகையேதினி
நிலைக்கும்படி தயைசெய்குவாய் நீயன்றிவே றில்லைப்பிறை
மிலைக்குஞ்சடை பரமன்றரும் வேலாயுதா வேலாயுதா

40     நற்புத்தியா நன்மார்க்கரா நன்ஞானரா நல்லோர்வயிற்
றுற்புத்தியி னற்கோள்பதி னாரோமிடத் துதயஞ்செயக்
கற்புத்தியாய்க் கதிராளர்போற் கற்பித்தியாய் கருணாகரா
வெற்பத்திமா முகனார்துணை வேலாயுதா வேலாயுதா

41     நாலாகலைக் கீரர்க்குவேல் நடத்தும்படி நமனெய்தினால்
சேலாகிய விழிவள்ளியார் தெய்வானயாந் தேனாருடன்
மாலாகிநீ விளையாடினால் மயிலாகிலு மயில்தப்பினால்
வேலாகிலும் வரக்காட்டுவாய் வேலாயுதா வேலாயுதா

42     தலையாந்திறப் புணைகாட்டியுந் தாளாந்திறச் சிலைகாட்டியு
மலையாழியில் விழுவார்கள்போ லழுந்தாமலு மிதவாமலுந்
தொலையாதசஞ் சலவாழக்கையிற் சுழல்போதொரு சுறவாய்வரும்
விலைமாதர்பா லுறவாவனோ வேலாயுதா வேலாயுதா

43     துரகத்தையே செய்தேனலாற் சுகிர்தத்தையே செய்தேனிலை
யுரகத்தினுக் கமுதங்கொடுத் துறவாடியே பெறுநஞ்சுபோல்
நரகத்தையே பெறுமெய்ப்பொருள் நானல்கவே யூனல்குவார்
விரகத்திலே மனம்வைப்பனோ வேலாயுதா வேலாயுதா

44     சரதத்தையே சொல்லாமலே சரதத்தையே சொல்வார்மதன்
நிரதத்தையே நிகரல்குலா ரின்பத்தையே யன்புற்றுநான்
சுரதத்தையே செய்தேனலாற் சுகிர்தத்தையே தருகார்த்திகை
விரதத்தையே செய்தேனிலை வேலாயுதா வேலாயுதா

45     காரானமே னியன்வாசவன் கஞ்சாசன னஞ்சானன
னாராலுமே முடியாவணம்யாமே முடித்தருள் வோமெனச்
சூராதிசூரனை வென்றுவிண் டொடுகுக்கிடத் துவசம்பெறு
வீராதிவீரனும் நீயலவோ வேலாயுதா வேலாயுதா

46     அருந்தாதைதாய் மகன்றாரமா மடும்பாரமே சுமந்தாசையால்
வருந்தாதெலா மெலிந்தோயவோ வளைந்தேறுகூ னுடம்பானவா
ரறிந்தாரிதோ மடிந்தாரையோ வெனும்போதிலே செழுந்தீயின்வாய்
விருந்தாகவே யிருந்தேனையாள் வேலாயுதா வேலாயுதா

47     துரும்பானதைத் தூணாக்குவாய்த் தூணானதைத் துரும்பாக்குவா
யரும்பாரமே ருவைரேணுவா யணுவானதை மகமேருவா
யிரும்பாரிற்செய் வாய்சாட்டைதா னில்லாமற் பம்பரமாட்டிய
விரும்பாண்மையின் றிறமென்சொல்வேன் வேலாயுதா வேலாயுதா

48     பூரித்திடுஞ் சுடரித்திடும் புளகித்திடும் பூணாரமே
பாரித்திடு மீளநீரெனப் பச்சென்றிடும் வெச்சென்றலங்
காரித்தசெப் பெனவிம்மியே கச்சுக்கடங் காமற்பொரும்
வேரித்தனக் குறமங்கைசேர் வேலாயுதா வேலாயுதா

49     வருத்திட்டமும் பொருதிட்டமும் மதிதிட்டமும் விதிதிட்டமு
மொருதிட்டமோ பலதிட்டமோ வோதிட்டசொல் வாதிட்டமே
பொருதிட்டசூரனை வேலினாற் பொன்றிட்டுற நினதென்னவே
விருதிட்ட சேவற்கேதனா வேலாயுதா வேலாயுதா

50     சுரலைக்கொடி சாவற்பரி கொங்கைத்துணை பதியாயுத
மிரலைக்கக லிடைதாரமின் னென்றாலுநீ பொறுக்கக்கடன்
நரலைக்கொரு மகராகர நயனத்திலே கைபட்டிடில்
விரலைத்தறித் திடுவார்களோ வேலாயுதா வேலாயுதா

51     மயில்மஞ்சினைக் கண்டாற்போல மகிழ்வெய்தியே வாஞ்சித்தபேர்க்
கயில்மஞ்சனப் பதுமச்சர ணாதாரமென் றறியாமலே
துயில்மஞ்சமா ளிகைசெம்பொனே சுகமென்றுமே துணியும்பொலேன்
வெயில்மஞ்சளே நிலையென்பனோ வேலாயுதா வேலாயுதா

52     கைகண்டநெல் லியைப்போலவே கரங்கண்டுளங் களிகூரவே
யைகண்டமே லுறுநாளில்வந் தஞ்சேலென வருள்செய்குவாய்
செய்கண்ட நாகையிலுத்தமர் தியாகேசர்தன் சேயாகுகா
மெய்கண்ட வேலாசண்முகா வேலாயுதா வேலாயுதா

53     பயனாகைக்கே தமிழ்பாடினாற் பகர்தீபமாம் பரிசித்திடில்
வயனாகைக்கே யெழுதாவிடி லாற்றங்கரை மரமல்லவோ
கயனாகைக்கே சரிமார்க்கமாக் காலடிதன் றுணையானவர்
வியனாகைக்கே கயவாகனா வேலாயுதா வேலாயுதா

54     ஈயாமலும் நல்லோர்களை யெண்ணாமலு மெண்ணிக்கலை
யாயாமலுங் கேளாமலு மறியாமலு மறிவீனர்பா
லோயாமலுந் தமிழ்சொல்லியு முண்டோபலனுனை நம்பினேன்
வீயாமலுன் னருள்செய்குவாய் வேலாயுதா வேலாயுதா

55     கைசொல்லுவேன் புடைவக்குளே கைச்சாடையுஞ் சொல்வேன்மழு
நெய்சொல்லு நின்னையென்பது நீயென்றுளம் நினையாதவன்
பொய்சொல்லுவேன் வசைசொல்லுவேன் புறஞ்சொல்லுவேன் பிழைசொல்லுவேன்
மெய்சொல்லுவே னறிகின்றலன் வேலாயுதா வேலாயுதா

56     தும்பிக்கையா னவனுக்கொரு துணையானவா சுரர்சேவிதா
நம்பிக்கைநீ யல்லாமலே நாடேனொரு தெய்வத்தையு
மம்பிக்கைநேர் விழியார்மொழி யார்வுக்குடை யானென்றுதான்
வெம்பிக்கை விட்டாலுய்வனோ வேலாயுதா வேலாயுதா

 57    ஆம்போதும்வேல் மயிலுந்துணை யாகாமலே யாகங்களும்
போம்போதும்வேல் மயிலுந்துணை பொறிநுட்பமும் நெறிதப்பியே
சாம்போதும்வேல் மயிலுந்துணை சடம்வீழ்ந்தபின் பிடிசாம்பலாய்
வெம்போதும்வேல் மயிலுந்துணை வேலாயுதா வேலாயுதா

58     காம்பாகுமென் றேள்வல்லியார் காந்தாபுகழ்ச் சேந்தாவிடப்
பாம்பாகுமா பரணன்றரு பாலாதிருப் புகழுக்குமெய்
யாம்பாகுபோல் நற்கீரனா ரருளுந்தமிழ்க் கடியேன்றமிழ்
வேம்பாகுமே கரும்பாகுமோ வேலாயுதா வேலாயுதா

59     காப்பாகிலும் படைப்பாகிலுங் கருதாமலே யழிப்பாகிலு
மூப்பாகிலும் வேள்வித்தொகை முடிப்பாகிலு மற்றேரிலுங்
கோப்பானசெந் தமிழ்பாடியே கொண்டாளுமென் குலம்தெய்வம்நீ
மீப்பானுவை நிகர்குண்டலா வேலாயுதா வேலாயுதா

60     அப்பத்தரா மருபத்துமூ வடியார்களுக் காயுன்பிதா
செப்பத்தொடு வந்தாட்கொளுஞ் சேதிக்குநான் சிறியேனெனிற்
கொப்பத்தில்வீழ் கரியென்னவே கூற்றானவன் கொடுபோகவே
வெப்பத்துடன் வாராமலாள் வேலாயுதா வேலாயுதா

61     நீந்தாத்துயர் நட்டாற்றினில் நீகைவிடில் நிலையேதினி
சேந்தாகடம் பாசண்முகா சேயாகுகா தெய்வானைதன்
காந்தாசிலம் பாகாங்கயா கந்தாகதிர் காமத்தினில்
வேந்தாவருள் கூர்ந்தருள்வாய் வேலாயுதா வேலாயுதா

62     அந்தப்பதஞ் சரியைக்குமெய் யவிரப்பதங் கிரியைக்குமே
யிந்தப்பதம் யோகர்க்குமே யீற்றுப்பதம் ஞானர்க்குமே
தொந்தப்பத மானாலினிச் சும்மாவிடு வேனோவர
விந்தப்பதம் தந்தாளுவாய் வேலாயுதா வேலாயுதா

63     சிந்தாகுலந் தீர்ப்பாயினித் தீராவிடிற் செவ்வேளெனக்
கந்தாவெனச் சொல்வேனுனைக் கடம்பாபெருங் கற்பாவைதன்
மைந்தாவெனப் பித்தன்றரு மகனேயென வசைபேசுவேன்
விந்தாசலப் புயாபரனே வேலாயுதா வேலாயுதா

64     வந்திட்டது கண்டேனலால் வாராமையைக் கண்டேனிலை
நொந்திட்டதா விக்கென்பனோ நோய்சேருடற் கேனென்பனோ
முந்திட்டவோ நின்றெப்பதா மூன்றும்பிரி பாகந்தரில்
வெந்திட்டதும் வினையெய்துமோ வேலாயுதா வேலாயுதா

65     போதாந்தமாய்ச் சுடரெய்தியே போய்நின்றபின் னாளாந்தமாய்
மாதாந்தமாய் வருஷாந்தமாய் வயதாந்தமாய் வருமுன்னரே
நாதாந்தனே லோகாந்தமாம் ஞானாந்தமே வரநல்குவாய்
வேதாந்தனே யேகாந்தனே வேலாயுதா வேலாயுதா

66     முத்தேபது மத்தேவளர் முதலேயொரு முத்தேவர்சம்
பத்தேமறைப் பொருளேபொருட் பரமேபர மானந்தமே
சித்தேபரி சித்தோருளத் தேவேமிகத் தெய்வப்பயிர்
வித்தேவிசைக் கதியாதிபா வேலாயுதா வேலாயுதா

67     மதனப்படும் மலர்தைக்கவே வடுவிட்டபுண் ணொருபக்கமாய்ச்
சதனப்படா முலையார்நகந் தைக்கின்றபுண் ணொருபக்கமா
யதனப்படும் வலியோடெம னடுவாள்புணி லிடுகோலென
விதனப்படுமெனை யாளுவாய் வேலாயுதா வேலாயுதா

68     மாதாபிதா வாசானுநீ மாமானுநீ மாதேவனீ
யாதாரநீ யாகாயநீ யாகாரநீ யாள்வானுநீ
தாதாவுநீ தாரானுநீ சார்வானுநீ சாரானுநீ
வேதாவும்நீ மாவீசனீ வேலாயுதா வேலாயுதா

69     வேதாரணி யஞ்சேர்ந்திடில் விடுவார்களோ சேவிப்பது
வேதாரணி யடுமைப்பணி விடையல்லவோ வினிமேற்குறை
வேதாரணிச் சடிலன்றரு விழியேவிழி மணியேமிக
வேதாரணி மணிமார்பனே வேலாயுதா வேலாயுதா

70     மதிவண்ணமா முகவண்ணமு மலைவண்ணமாம் புயவண்ணமும்
நிதிவண்ணமே னியின்வண்ணமும் நிறைவண்ணமே விழிகொள்ளுமோ
யதிவண்ணமாங் கெதிவண்ணமே யைவண்ணமே யிவ்வண்ணமோ
விதிவண்ணமு மெவ்வண்ணமோ வேலாயுதா வேலாயுதா

71     வேதண்டகோ தண்டன்றரு வேளேதிரு மெய்ஞ்ஞானமாம்
கோதண்டமால் மருகாவுனைக் கும்பிட்டவர் முன்வந்துநீ
வேதண்டவே பாரப்பிணி விட்டோடமெய் யருள்கூருவாய்
வேதண்டசூ ரனைவென்றவா வேலாயுதா வேலாயுதா

72     கத்தூரியே யக்காரமே கர்ப்பூரமே கட்டாணியே
முத்தாரமே சட்கோணமே முக்கோணமா நிட்சேபமே
கொத்தாருவே தத்தாலுநின் கொட்டாரமே யெட்டாதுநூல்
வித்தாரநீ பத்தாமனே வேலாயுதா வேலாயுதா

73     வேதத்துநற் பொருளென்றுனை மெய்யுண்மையாய் விரும்பிக்கொள
வேதத்துவ நிலையாமது மிருகண்டுவின் மகனுக்குற
வேதத்துவ ரும்போதுபொய் மெய்யாகவு மிலையோமிக
வேதத்துமஞ் ஞையிலேறிய வேலாயுதா வேலாயுதா

74     கண்ணேறுசற் றணுகாமலே காப்பாயெனைக் காராலுமோ
தொண்ணூறுட னெருபத்துமே சுகமாயுனைத் தொழுதேத்தவே
தண்ணீருமெய்ஞ் ஞானோதயந் தருநீறுசுந்தர நீறெனும்
வெண்ணீறுதந் தெனையாளுவாய் வேலாயுதா வேலாயுதா

75     பூணாசையுங் கலையாசையும் பொருளாசையும் பொருள்சேர்ந்திடிற்
பேணாசையும் மகவாசையும் பெண்ணாசையும் மண்ணாசையு
மூணாசையும் பதினாறென வோதாசையும் பேராசையாம்
வீணாசையென் றெழியுங்கொலோ வேலாயுதா வேலாயுதா

76     கண்ணப்பர்கா லுதைபட்டதுங் கற்சாக்கிய ரெறிபட்டது
மண்ணப்படும் விசயன்கைவில் லடிபட்டது மரனல்லவோ
வெண்ணப்படு மோட்சந்தர விலையோவடி யேன்சொல்லிய
விண்ணப்பங் கேட்டருள்கூறுவாய் வேலாயுதா வேலாயுதா

77     தீண்டாவழும் பிரத்தந்தசை சேர்ந்தென்புதோல் போர்த்தன்புட
னூண்டாங்கு மொன்பது வாசன்மேலொரு வாசலிலுண்டாகியே
மாண்டாலொரு பிடிசாம்பலாய் மண்ணாய்விடு மாயச்சடம்
வேண்டாமையா வேண்டாமையா வேலாயுதா வேலாயுதா

78     திண்டாட்டந்தீர் மன்றாட்டமே செவ்வாய்தயித் தியரானவர்
கொண்டாட்டமுங் களியாட்டமுங் குடியாட்டமுங் கூத்தாட்டமும்
வண்டாட்டமும் வம்பாட்டமும் மாறாட்டமும் போராட்டமும்
மிண்டாட்ட முந்தீரப்பொரும் வேலாயுதா வேலாயுதா

79     கண்டாமரை முகந்தாமரை கைத்தாமரை கழலாமடி
யொண்டாமரை வாய்த்தாமரை யுளத்தாமரை யோர்ந்தெய்துவாய்
வண்டாமரைக் கொடிபோலளி வான்முட்டவே மதியானது
வெண்டாமரை யாம்நாகையில் வேலாயுதா வேலாயுதா

80     தூண்டாமலும் பாபங்கள்பொய் சொல்லாமலும் விலைமாதரைத்
தீண்டாமலு மறிவீனரைச் சேராமலுஞ் சமயங்களிற்
றாண்டாமலும் பிணியால்மனஞ் சலியாமலும் பரதா(ர)மே
வேண்டாமலுமருள் கூருவாய் வேலாயுதா வேலாயுதா

81     ஆண்டுபிறக் குந்திங்களீ ராறிற்றிதி யைம்மூன்றினு
மாண்டுபிறக் கும்மேழினில் வாரமிரு பத்தேழினா
னீண்டுபிறக் கும்யாவுமே நிலையாதகா ரணமல்லவோ
மீண்டும்பிறப் பெய்தாமலாள் வேலாயுதா வேலாயுதா

82     இடியாலடி படுமாசுண மெனவேவரு மெமதூதர்கைத்
தடியாலடி படுமென்றுயர் சாற்றுந்திரு வெண்ணீறெனும்
பொடியாலடி படவேயருள் புரிவாயுனைப் போற்றார்கள்போல்
மிடியாலடி படநீதியோ வேலாயுதா வேலாயுதா

83     படவும்படா தில்லாமையிற் பட்டாலுமோ பாவங்களாற்
கெடவும்படாத் தீயர்களைக் கெஞ்சப்படா துண்டிக்கிரை
யிடவும்படா குடிமைச்சுமை யெடுக்கப்படா தென்றாலுமோ
விடவும்படா தென்செய்குவேன் வேலாயுதா வேலாயுதா

84     உடலைப்பல நாளுமெடுத் தோய்வின்றியே யொழியாப்பெருங்
கடலைக்கடப் பதுமெந்தநாட் கப்பற்ககப் படுகாகமாய்
நடலைக்குடி மையைநம்பியே நமனுக்கிறைக் குடியாவனோ
விடலைக்குரு பரநாதனே வேலாயுதா வேலாயுதா

85     ஆடிக்கைநேர் தெண்டித்தபேர்க் களித்தோர்களு மருமந்தபொன்
றேடிக்கையா லீந்தோர்களுஞ் சீர்கேடராய்ச் சீமான்களாய்
வாடிக்கைமேல் வாடிக்கையாய் வரப்பண்ணுமுன் மதிமந்திரம்
வேடிக்கைமேல் வேடிக்கைகாண் வேலாயுதா வேலாயுதா

86     மடப்பாவைமார் விடப்பார்வையோ நெருப்பாறுசேர் மயிர்ப்பாலமே
நடப்பார்களோ வினிப்போதுநீ நயப்பாகநின் னீராறுகண்
ணிடப்பார்வைதா வுடற்பாதியா மலைப்பாவையா ருழைப்பாணியார்
விடைப்பாலருள் தவப்பாலனே வேலாயுதா வேலாயுதா

87     நடைதந்தெனை நடத்திப்பிறர் நகைதந்தது மாற்றிக்கலை
யுடைதந்தமு தூண்டந்துபூ ணெளிதந்துயர் களிதந்தருள்
மடைதந்துநல் வழிதந்தெமன் மதியாதுனைப் பிரியாத்தல
விடைதந்தெனை யாள்வாயினி வேலாயுதா வேலாயுதா

88     எடுப்பார்களும் பல்லக்கின்மே லிருப்பார்களு மிவர்தம்மிலே
கொடுப்பாரையுங் கொடுக்காரையுங் குறியாலறி வித்தாய்கொடை
தடுப்பாரையுங் காட்டாமலே தனைவந்தடைந் தோர்க்காயுயிர்
விடுப்பாரையுங் காட்டாயினி வேலாயுதா வேலாயுதா

89     எட்டிக்கனி கண்டாலழ கெடுத்துப்புசிப் பாரோவெறுங்
குட்டிச்சுவ ரெனுலோபரைக் குறியாவண மருள்வாய்சமர்
கிட்டிப்பொரு மசுரப்படை கெட்டுப்பிற கிட்டுச்செல
வெட்டிப்பலி யிட்டுப்பொரும் வேலாயுதா வேலாயுதா

90     உடற்கைப்பழ வினைத்தோற்பையை யூரும்புழு வுறைகந்தலைச்
சடக்கைக்குதித் துயிர்போய்விடிற் றாயுந்தொடில் ஸ்நானஞ்செயுந்
தொடக்கைக்கழு வுண்ணும் பொதிசோற்றைக்குறு நாற்றைப்பெரு
விடக்கைசுமந் தென்னேபலன் வேலாயுதா வேலாயுதா

91     மோடத்தைவே ரறநீக்கியே மோனத்தினால் ஞானத்தினாற்
றேடத்தையு மறநீக்கியே சுட்டாய்ச்சொலுஞ் சட்டாக்கரப்
பாடத்தையும் வருவித்தபின் பருவப்படும் பண்டாரமாம்
வேடத்தையும் தந்தாளுவாய் வேலாயுதா வேலாயுதா

92     செஞ்ஞாயிறு நாள்வாங்கியே செல்லச்சமன் செங்கைப்படல்
பஞ்ஞாகப்பாய்ப் படுத்தோரை யப்படியாக்கி லெப்படியுய்குவேன்
அஞ்ஞானமாந் திமிரங்களை யாதித்தன்முன் பனியாக்கியே
மெஞ்ஞானமே தந்தாளுவாய் வேலாயுதா வேலாயுதா

93     துஞ்ஞாமலே துயராமலே சோராமலே சோம்பாமலே
யெஞ்சாமலே யிரியாமலே யேறாமலே யில்லாமையா
லஞ்சாமல்நோ யணுகாமல்மெய் யழியாமலே யாகாமிய
மிஞ்சாமலே யருள்வாய்வரம் வேலாயுதா வேலாயுதா

94     நேசிக்குமுன் னடியார்களை நேசிக்கவும் நின்பாதமே
பூசிக்கவு மானந்தமாய்ப் பூரிக்கவும் போற்றத்தமிழ்
வாசிக்கவு மவுனத்திலே வாழ்விக்கவுஞ் செய்யாமலே
வேசிக்குமால் கொளவைப்பையோ வேலாயுதா வேலாயுதா

95     வெங்கைக்குநோ சிலையாளரை வெறுவாய்க்கிலை கெட்டோர்வளை
வெங்கைத்தன பதியென்னவே வீணிற்றமிழ் பாடாமலாள்
வெங்கைப்பிரா னருள்சேயனே மிக்கார்குறத்திக் காகவே
வெங்கைத்தரு வாய்நின்றிடும் வேலாயுதா வேலாயுதா

96     வாகாமலர் வேதப்பிரான் மணத்தச்சன்வைத் திடுகப்பலை
யாகாமியக் கடல்மேற்பொறி யைம்பாயினா லலையாமலே
பாகாமெஞ் ஞானத்தீவுறப் பதபங்கயக் கரையேற்றிடும்
மீகாமனீ தானேயலோ வேலாயுதா வேலாயுதா

97     பகடன்புற வுயிருக்கெலாம் பறந்திட்டபுள் விலங்குக்கட
ககடன்கள வுக்காளைய னைம்பூதியத் தாலூர்ந்திடுஞ்
சகடன்குணம் பொறைகல்வி நற்றவமற்றவன் சகலர்க்குமே
விகடன்றனக் கருள்கூருவாய் வேலாயுதா வேலாயுதா

98     மோகாடவி வளருங்கொலோ முருகாடவிக் குழலார்கள்மேல்
மாகாடவி நிலவென்னவே வாணாளெலாம் வீணாளதாம்
நாகாடவி யிடியென்னவே நமன்வந்திடும் நாள்வந்துகா
மேகாடவி திகழ்நாகைவாழ் வேலாயுதா வேலாயுதா

99     அகுதிக்குவே றெருத்திக்கு மில்லாதிக்குடி லைப்பேர்வினைப்
பகுதிக்குள மெலியாதருள் பரிதிக்குநீ சுருதிக்குளார்
தொகுதிக்குநீ தகுதிக்குநீ சோதிக்குரு பரனேயருள்
மிகுதிக்குநீ யல்லாதிலை வேலாயுதா வேலாயுதா

100    குகவாழிசெந் தூராவினன் குடிவாழிபுட் கொடிவாழிசண்
முகவாழிசூர்ப் பகைவாழியுன் முன்வாழிநீ பஞ்சேருமார்
பகவாழியிச் சதகந்தனைப் படித்தோர்களுங் கற்றோர்களு
மிகவாழிவேல் மயில்வாழியே வேலாயுதா வேலாயுதா

 

-: மெய்கண்ட வேலாயுத சதகம் முற்றிற்று :-

 

 

      

 

 

 



Home Contact