Raja Gopurams in Nov-2011

குமர கோயில்


மெய்கண்டமூர்த்தி சுவாமி திருக்கோயில் - நாகப்பட்டிணம்  
காலம் முழுதும் கந்தற்கே கவிகள் அறைந்த்துய்த் தவரென்றிஞ், ஞாலம் இறைஞ்சும் அருணகிரி நாதர் திருவாய் மலர்ந்தநறும்,
சீலம் மிகுசந் தக்
கவிகள் தெரித்துப் பரவி மெய்கண்ட, வேலன் அருளுக்காளான மேலோர் பலர்வாழ் வதுநாகை

திரு நாகை  குமரகோவில் என்னும் அருட்திரு மெய்கண்டமூர்த்தி

திருக்கோயில் வரலாறு (1975)

1975-ம் ஆண்டு நாகை திரு. இரா. ஆதிகேசவ பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று நாகை வார வழிபாட்டு மன்றத்தாரால் வெளியிடப்பெற்ற திருக்கோயில் வரலாற்று நூலின் இணையப் பதிப்பு.
(C) உரிமை ஆசிரியருக்கும் வெளியிட்டோருக்கும்

அமரர்கள் போற்றும் குமரர் கோட்டம்

சிவராஜதானி என்று அழைக்கப்பெறுவதும் சப்தவிடங்க தலங்களில் ஒன்றானதுமான நாகப்பட்டிணம், தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு தெற்க்கே சுமார் 300 கி.மீ தொலைவில் அமைந்துமள்ள தொன்மையான கடற்கரை நகரமாகும்.

கடற்கரையை ஒட்டி உள்ள ஊர்கள் பட்டிணம், பாக்கம் எனப் பெயர் பெறும். பன்னெடுங் காலங்களுக்கு முன்னே நாகர்கள் என்ற வகுப்பினர் இவ்வூரில் மிகுதியாகத்தங்கி ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் சைவ, வைணவ கடவுளர்களைச் சமய வெறுப்பு இன்றிப் பூசித்து வந்தனர். அத்தெய்வங்களுக்கு இவ்வூரில் ஆலயங்கள் பல ஏற்படுத்தினர். இப் பணிகளை யெல்லாம் முன்னின்று நடத்திய அவர்களது தலைவனான நாகமன்னன் பெயரால் இந்நகர் நாகன்பட்டிணம் எனப் பெயரைமைந்த்து பின்னர் நாகப்பட்டிணமாயிற்று. இவர்களுக்குப் பின்னர் இவர்களால் ஏற்படுத்திய இத்திருக்கோயில்களைத் தமிழரசர்களான சோழர்களும் பல்லவர்களும் புதுப்பித்து பாதுகாத்தனர். பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்க மராட்டிய மன்னர்களது ஆட்சியில் நாகை வாழ் பெருமக்கள் இக்கோயில்களை நல்ல முறையில் சீர்திருத்தி அமைத்தனர்.

இவ்வாறு அவ்வக் காலங்களில் பாதுகாக்கப்பெற்ற நாகைக் கோவில்களில் சிவனார் கோவில்களே மிகுதியாக உள்ளதால் இத்தலம் சிவராஜதானி எனப் பெயர் பெற்றது. சிவபெருமானின் உடனுறையும் தெய்வங்களான் விநாயகர், சுப்பிரமணியர், அம்பிகை, சட்டைநாதர், வீரபத்திரர் ஆகியோருக்கு இங்கு தனிக்கோயில்கள் உண்டு. சிவாலய அமைப்புப் போலப் பரிவார தெய்வங்களை நடுவில் கொண்டு சுற்றிலும் மற்ற பரிவாரங்களோடு உள்ள சில கோயில்கள் நாகையில் உள்ளன.

கணபதியை மகாலிங்கம் எழுந்தருளியுள்ள நடுவிடத்தில் வைத்துச் சுற்றிலும் மற்ற சில பரிவாரங்களோடு விளங்கும் ஆலயம் நாகை ஆபத்துக்காத்த பிள்ளையார் கோயிலாகும். அம்பிகையை மாரியம்மன் என்ற பெயருடன் அருட்குறி எழுந்த்தருளும் மூல இல்லில் வைத்துச் சுற்றிலும் சண்டி உள்ளிட்ட சில பரிவாரங்களோடு விளங்கும் தனிக்கோயில் நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலாகும். இந்த வரிசையில் முருகப்பிரானை மூல மூர்த்தியாகக் கொண்டு சண்டி முதலிய பரிவாரங்களோடு விளங்கும் ஆலயம் குமரர் கோயில் என்னும் மெய்கண்ட மூர்த்தித் திருக்கோயிலாகும்.

நகரங்களில் சிறந்த்தது காஞ்சி; அதில் முருகனுக்கு ஏற்பட்ட தனிக்கோயில் காஞ்சி குமரர் கோட்டமாகும். அதைப்போல் சோழ நாட்டு கடற்கரை நகரங்களில் சிறந்ததான நாகையில் உள்ள முருகன் கோயிலை நாகைக் குமரர்கோட்டம் என்று கூறுவர்.

இத்திருக்கோயிலின் அருகே குமரவேள் தாதையான அமுதகடேசப் பெருமாள் (கட்டியப்பர்) அருட்குறிகொண்டு வீற்றிருக்கின்றார். அவரை அமரர்கள் வந்து வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகின்றது. தந்தையை வழிபட்ட தேவர்கள் அருகில் உள்ள மைந்தனையும் மறவாது வழிபட்டிருப்பர். எனவே இத்திருக்கோயில் அமரர்கள் வழிபட்ட குமரர்கோட்டம் ஆகும்.

தாதையிடமிருந்து வந்து தனிக்கோயில் கொண்ட வரலாறு

இக்கோயில் எழுந்தருளியுள்ள மூல மூர்த்தியாகிய மெய்கண்டவேலவர் முன்னொரு காலத்தில் இந்நகரின் தென் மேற்க்கு மூலையில் விருத்தகாவிரி ஆற்றின் வடகரையில் உள்ள கார்முகேச்சுரர் என்ற சிவன் கோயிலின் திருச்சுற்றுப் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருந்தார் என்றும்; பதினேழாம் நூற்றாண்டில் நாகையை ஆண்ட அன்னியக் கும்பினியரான் உலாந்தர்கள் அப்பகுதியைத் தங்கள் உபயோகத்திற்க்கு எடுத்துக் கொண்டபோது அதிலிருந்த கோயிலை அப்புறப்படுத்தவே அதுகாலை புதுவையை ஆண்ட பிரஞ்சு கவர்னர் டூப்ளேயின் துவிபாஷியான் ஆனந்தரங்கப் பிள்ளை அரசியல் காரியமாக காரைக்கும் நாகைக்கும் வந்து போகும் போது அவரது முயற்சியால் நகரின் நடுவிடத்தே தற்போது உள்ள கோயிலைக் கட்டி அதில் முருகப்பெருமானை எழுந்தருளுவித்துப் பிரதிட்டை செய்ததாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு.

மகாலிங்கமாகிய கார்முகேச்சுரர் தற்போது காயோரகணப்பெருமாள் ஆலய உள் திருச்சுற்றின் தென் மேற்கு மூலையில் வினாயகர் சன்னதியின் இடது புறத்து எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.

வினாயகர் மட்டும் முன்பு கார்முகேச்சுரர் கோயில் இருந்த இடத்திற்க்கு அருகில் இன்று சம்மட்டி பிள்ளையார் என்ற பெயரருடன் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். ஓடம்போக்கி ஆற்றங்கரையில் முன்பு சண்பங்கோரைகள் அதிகமாக இருந்ததால் சண்பங்காட்டு பிள்ளையார் என்று பெயர் ஏற்பட அதுவே பின்னர் சம்மட்டி பிள்ளையார் என ஆயிற்று என்பர். நிற்க. இச்செய்திக்கு அரண் செய்வது போல் பதினெட்டாம் நூற்றாண்டில் முருகன் கோயில் ஏற்பட்ட காலத்தே அக்கோயில் பணியாளராக இருந்து முருகன் அருளால் பாடும் ஆற்றல் பெற்ற அருட்கவி அழகுமுத்துப் புலவர் என்பவர் அபபெருமான் மீது பாடிய திறப்புகழ் என்ற நூலின் இறுதியில் வரும் வாழ்த்துப் பாட்டில் "நாகை வருரெங்கன் வாழி" என நிகழ் காலத்தில் வைத்துப் புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையை வாழ்த்துவதிலிருந்து இக்கோயில் ஆனந்தரங்கப் பிள்ளை முயற்சியால் கட்டப்பெற்றது எனத் தெரிகின்றது. அதற்கேற்ப அவரது உருவமும் இக்கோயில் தூண் ஒன்றில் காணப்படுகின்றது.

திரிசிபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தான் பாடிய நாகைக் காரோணப் புராணத்தில் கார்முகேசப்படலம் என ஒரு பிரிவமைத்துப் பரிவாராலய மூர்த்தியாக நமது முருகப்பிரான் எழுந்தருளியுள்ள சிவன் கோயிலுக்கு ஓர் புராணம் பாடியுள்ளார். அதில் பரசுராமரால் சிவபெருமான் அருட்குறி ஊரின் தென் மேற்க்குத்திசையில் விருத்தகாவிரி ஆற்றின் அருகில் பிரதிட்டை செய்யப்பெற்றதாகக் கூறுகின்றார்.

"நிருதி யாசையில் புகா
ஒரு விருத்த காவிரி
அருகினோர் சிவக்குறி
பெருகு மன்பில் தாபித்தான்"

என்பது அச்செய்யுள். தந்தையைக் கொன்ற அரசகுலத்தை அழிக்க பரசுராமன் அக்கோயிலின் அருகே ஒரு குளத்தை உண்டாக்கி அதில் நீராடி விதிமுறையோடு அருட்குறியை வழிபட, பூசனைக்குகந்த பெருமான் கார்முகம் என்ற வில்லை தந்தருளினார். அதிலிருந்து அவ்விறைவனுக்கு கார்முகேச்சுரர் எனப்பெயர் உண்டாயிற்று. இதுவே காரோணப்புராணத்தில் கண்ட செய்திகளாகும். அழகுமுத்துப் புலவரும் தான் பாடிய மெய்கண்டவேலர் திறப்புகழில் பெருமான் சிறப்புடைய நாகையில் எழுந்தருளியுள்ளவன் எனச் சிறப்பித்துக் கூறுமிடங்களில்

"மிகுந்த காசியின் மாநதி போலவும்
வடக்கு மாதிரமேல் முகமாய் வரும்
விருத்த காவிரிசூழ் திருநாகையின் முருகோனே"

என ஓர் இடத்தில் கூறியுள்ளார். இவ்வரிகள் முன்னாளில் முருகன் விருத்த காவிரி தீரத்தில் எழுந்தருளியிருந்தார் என்பதனை நினைவு படுத்துகின்றது..

சிலர் நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் வடக்கு வீதியின் கீழ்கோடியில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலே புராணத்தில் கூறப்பட்டுள்ள கார்முகேச்சுரர் கோயில் என்பர். மாரியம்மன் எழுந்தருளியுள்ள கருவறை அர்த்த மண்டபத்தில் உள்ள மகாலிங்கமே கார்முகேச்சுரர் என்றும் அவரை பிரதிட்டை செய்த பரசுராமருக்கு அங்கு திருவுருவம் இருத்ததாலும் பரசுராமனின் தாயாகிய ரேணுகையே மகா மாரியாக உருவெடுத்துள்ளாள் என்றும் அருகில் திருமாலுக்குரிய சார் புஷ்கரணி என்ற திருக்குளமே சிவனருளாள் பரசுராமனுக்கு கார்முக வில் தோன்றிய கார்முக தீர்த்தம் என்றும் கூறுவர். இக் கோயில் பிற்காலத்தே நெல் வாணிபம் நடந்த இடத்தில் ஓர் குடும்பத்தாரது முயற்சியாலும் ஊரவரது உதவியாலும் பல இடங்களில் கிடைத்த சிவபரிவார மூர்த்திகளின் திரு உருவங்களை சேர்த்து சிவாலய முறைப்படி மாரியம்மனுக்கு எழுப்பப்பெற்ற ஒரு திருக்கோயிலே யன்றி நாகைப் புராணத்தில் கூறப் பெற்றுள்ள கார்முகேச்சுரர் கோயில் அன்று. 

செந்தமிழ்க்கடவுளாம் மெய்கண்டவேலவன்.

இந்நில உலகை நம் ஆன்றோர்கள் நான்கு வகையாகப் பிரித்தனர். அவை முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பனவாகும். இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கடவுளர்களை நிறுவி வழிபட்டனர். அவற்றில் குறிஞ்சி என்ற மலை நிலத்துக்குச் சேயோன் என்ற முருகப்பிரானைத் தெய்வமாகக் கொண்டனர். முருகு என்ற சொல் இளமை, மணம், அழகு, தெய்வம் என்றெல்லாம் பொருள்படும். எனவே முருகினயுடைய முருகனுக்கு பல பெயர்களும் உண்டு. அவை குகன், கந்தன், குமாரன், சுப்பிரமணியன், வேலாயுதன், சண்முகன் என்பனவாகும். இவனது வரலாற்றை பழந்தமிழ் நூல்களும் கந்தபுராணம் போன்ற பெரு நூல்களும் விரிவாகக் கூறுகின்றன. கந்தபுராணம் கதைபோல் இருந்தாலும் அக்கதைகள் எல்லாம் கந்தவேளைக் கருத்தில் இருத்துவாருக்கு அக் கருத்துக்கிசைந்த தத்துவக் கருவூலங்களாக அமைகின்றன. இத்தகைய புராண நன்நாயகனான முருகப்பிரான் சிவபெருமானுக்கு இளைய பிள்ளையாகக் கூறப்படுகின்றார். உலகில் தீய சக்திகளைப் போக்கி அறத்தை நிலை நாட்டவும் அடியார்களுக்கு இம்மை மறுமை வாழ்வளிக்கவும் வீரமும் காதலும் ஒருங்கே கொண்டு தோன்றிய கடவுள் முருகனாவார்.

இவருக்கு இரு மனைவியர் உண்டு. வள்ளி, தெய்வயானை என்பது அத்தேவியரின் திருநாமங்களாகும். வேலாயுதம், சேவற்கொடி, மயில் ஆகியவை இவருக்கு முறையே படையும் கொடியும் ஊர்தியுமாகும். அம்மையர் இருவரையும் ஆழ்ந்தகன்று நுண்ணிய வடிவேலையும் சேர்த்து இப்பெருமானுக்குரிய முச்சக்திகளாகக் கூறுவர். அசுரர்களுடன் நிகழ்த்திய போருக்கு முன் இவருக்கு நாரதர் வேள்வியில் தோன்றிய ஆட்டுக்கிடாவே வாகனமாகும். பிணிமுகம் என்ற யானையும் இவருக்குச் சில சமயங்களில் வாகனமாக அமையுமென முருகாற்றுப்பாடை முழங்குகின்றது.

நாகை மெய்கண்ட வேலவராகிய முருகனுக்கு முன்னே நிற்பது பிணிமுகம் என்ற யானையேயாகும். தமிழ் நாட்டில் முருகனுக்குரிய படைவீடுகளான இராஜதானி ஆறு இடங்களாகும். அவற்றை ஆறுபடை வீடுகள் அல்லது ஆற்றுப்படை வீடு என்று கூறுவர். அவை முறையே திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை முதலியனவாகும். இவையேயல்லாது தமிழ்நாட்டில் வேறு சில சிறப்புத் தலங்களும் உண்டு. சோழ நாட்டில் சுவாமிமலை, வடிவேல்குடி, வைத்தீஸ்வரன் கோயில், திருவடைக்கழி, சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகியவை செவ்வேளுக்குரிய சிறந்தபதிகளாகும். முருகப்பிரானுக்குப் பல உருவங்கள் பேசப்படுகின்றன. அவற்றுள் பதினாறு உருவங்கள் தணிகைப் புராணத்தில் கூறுப்பட்டுள்ளன, திருமுருகாற்றுப்படை முருகப்பிரானின் திருமுக மண்டல எழிலையும் திருக்கைகளின் இயல்புகளையும் சிறப்பாகப் பேசுகின்றது.

ஆறுமுகம், பன்னிரண்டு கைகளுடன் கூடிய மயில் வாகன மூர்த்தியும், ஒரு முகம் இரண்டு கரங்கள் அல்லது நான்கு கரங்களுடன் கூடிய பாலசுப்பிரமணியர், சுப்பிரமணியர் போன்ற மூர்த்தங்களும் உண்டு. நாகைக் குமரர்கோயிலில் எழுந்தருளி உள்ள முருகப்பிரான், ஒரு முகம் நான்கு கரங்களுடன் கூடிய சுப்பிரமணியர் என்ற பெயருக்கு சுத்தப் பிரமத்தினின்று தோன்றிய மணி போன்றவர் என்று பொருளாகும். எனவே பரப்பிரம்ம ஓளியாக உள்ள முருகப்பிரானக்கு தனியே கோட்டம் எடுத்து வழிபடும் முறைமையைக் கூறும் ஆகமம் குமார தந்திரம் எனப்படும். முருகனுக்குரிய மந்திரம் ஆறெழுத்துக்களுடன் கூடிய சடாச்சரமாகும். குமாரய நம: சரவணபவ என்பவை ஆறெழுத்து மந்திரங்களாகும். சிலர் ஐந்த்தெழுத்துடன் பிரணவம் கூடிய ஓம் சிவாயநம என்பதுதான் ஆறெழுத்து என்றும் கூறுவர்.  

நாகைக் கோயில் எழுந்தருளியுள்ள மெய்கண்டவேலர் என்ற திருநாமம் பெற்ற மூலவராகிய முருகப்பிரான் நின்ற திருக்கோலத்தில் ஒருமுகம் நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றார். பின்புறம் தோகை மயில் நிற்கின்றது. திருமுடியில் கரண்ட மகுடம் தரித்துள்ளார். திருக்கைகளில் வச்சிரம், சக்தி ஆகிய படைகளைத் தாங்கியுள்ளார். மற்றைய இரண்டு கரங்களால் அபயமருளியும், துடையின் மீது வைத்தும் தோற்றமளிக்கின்றார். இருபுறமும் வள்ளி, தெய்வயானை என்ற இரு அம்பிகைகள் நிற்கின்றனர். அம்மையர் இருவரும் தாமரை மலரையும் குவளை மலரையும் தாங்கிக்கொண்டு கிரீடம் அணிந்தவர்களாய்க்காட்சி தருகின்றனர். இப்பெருமானுக்கு மெய்கண்ட மூர்ததி என்பது திருநாமம்.  மலத்தீனீங்கிய மெய்யறிவின் பயனாக உலகத்தை நிலையில்லாத பொய்ப்பொருள் கண்டு கழித்துச் சிவமே மெய்ப்பொருள் எனத்தேறித் துணிந்து அச்சிவஞானத்தை ஆன்மாக்களுக்கு உண்ர்த்திய கருணையாளனான கந்தபரமாசார்யன் ஆனதாலும், ஒரு காலத்தில் அச்சிவத்துக்கே மெய்ப்பொருளை உபதேசித்த சுவாமிநாதப்பெருமான் ஆனதாலும் அன்பர்கள் இம்மூர்த்திக்கு மெய்கண்டவேலவன், மெய்கண்டமூர்த்தி என்ற திருப்பெயர்களை இட்டு அழைப்பாராயினர். இவனைக் குமரன், குமாரன் என்றும் கூறுவர். சிவபிரானுக்கு பிள்ளையாதலால் சிவகுமாரன் எனவும், வடிவழகில் மன்மதனாகிய கருவேளை வென்ற செவ்வேளாதலால் குமாரன் எனவும் கூறப்பெற்றார்.  

திருக்கோயில் அமைப்பும் திருவிழாச் சிறப்பும்.

இக்கோயில் அருட்திரு நீலாயதாட்சி அம்மை உடனாய காயாரோகணப்பெருமாள் திருக்கோயில் தெற்கு வீதியின் வடசிறகில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகப்பிரான் இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். இத்திருக்கோயிலைச் சூழ நாற்புறமும் கருங்கல் செங்கற்களால் ஆன் மதிள்கள் உள்ளன. கீழ்புற தென்புற மதிள் சிகரங்களில் கைப்பிடிச் சுவர்வைத்தாற்போல சுதையினால் ஆக்கப்பெற்ற கோஷ்ட பஞ்சாங்கள் என்னும் சிற்ப உறுப்புக்களுடன் தெய்வ மனித உருவங்கள் காணப்படுகின்றன. இச்சுதை உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வெளிப்புறத்தில் மட்டும் தோற்றமளிக்கின்றன. இக்கோயிலுக்குக் கிழக்கிலும் தெற்கிலும் இரண்டு சிறு கோபுரங்களோடு கூடிய வாயில்கள் உள்ளன. மூன்று மாடங்களுடன் கூடிய இவ்விரு கோபுரங்களில் கிழக்குகோபுரமே சுதை உருவங்கள் நிரம்பப்பெற்றுச் சாலைகள் சற்று அகலமாகக் காட்சியளிக்கின்றது. கீழ்க்கோபுரவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே முருகப்பிரானை அடையாலாம். இங்கே நீண்ட சதுரத்தில் ஒரு திருமுற்றம் காணப்படும். இது முன்பு திறந்த இடமாக இருந்தது. மேலே கீற்றுக்கொட்டகை போட்டு இருந்தார்கள். தற்போது சிமுண்டு, இரும்பு கம்பி, கருங்கல் சல்லி ஆகியவைகளால் ஆன் மேல் முகடு போட்டு மண்டபமாக்கியுள்ளனர். இம் மண்டபத்தின் வடபுறத்தே உள்ள சிறு விமானங்களுடன் கூடிய கோவிலில் கிழக்கும் தெற்கும் நோக்கியவாறு விசுவநாதர், விசாலாட்சி என்ற நாமத்துடன் அருட்குறி கொண்டு சிவபிரானும் அம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். இச்சிறு கோயிலின் தெற்கு நோக்கிய மாடப்புரையில் தட்சணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். விசுவநாதருக்கு எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. இக்கோயில் நாகை நீலா தெற்கு வீதியில் இருந்த கா. அண்ணாமலை தேசிகர் என்பவரால் கட்டப் பெற்றதாகத் தெரிகின்றது. மெய்கண்டவேலவர் சன்னதியில் உள்ள சரவிளக்கு அமைப்பும் அன்னாரது திருப்பணியே யாகும். இனி இக்கோயிலுக்கு எதிர்புறமாக உள்ள மாடத்தில் பைரவர், சூரியன் ஆகியோர் எழுந்த்ருளியுள்ளனர்.

இவைகளுக்குச் சற்று வடபுறமாகத் தெற்கு கோபுரவாயிலுக்கு நேரே தெற்கு நோக்கியவாறு கருங்கற்கள் கொண்டு கட்டப்பெற்ற வசந்த மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தின் நடுவே அகலமான கருவறையும், இரு புறத்திலும் இரண்டு சிறிய அறைகளும் இருக்கின்றன. எழுதகத்துடன் கூடிய மேங்கூரையைத் தாங்கிய அழகிய தூண்களோடு கீழே படிகளுடன் இம்மண்டபத் தூண்களில் கூப்பிய கைகளுடன் சில மனித உருவங்கள் காணப்படுகின்றன. கனவாங்களுக்குரிய உடைநலன்களுடன் காணப்படும் இவர்கள் பதினேழாம் நூற்றாண்டளவில் அன்னியக் கும்பினியார் ஆட்சியில் மாட்சிமை பெற்றிருந்த ஆனந்தரங்கப் பிள்ளையும், அவர்கால நகரப் பெருமக்களுமாவர். இம்மண்டபம் இவர்களது முயற்சியால் கட்டப்பெற்றது எனத்தெரிகின்றது. இம்மண்டபத்தில் மெய்கண்டவேலர் ஆண்டு விழாக் காலங்களின் வந்து அமர்வதோடன்றி திங்கள்தொறும் வரும் கார்த்திகை நாட்களிலும் எழுந்தருளிச் சிறப்பு வழிபாடுகண்டருள்வர். அடுத்து இம் முன்றலில் முருகன் அடியாரான இடும்பன் என்பவர் தென்புற கோபுரவாயிலை ஒட்டி வடக்குப்பார்க்க ஒரு சிறு கோயிலில் எழுந்தருளியுள்ளார். சுதை சிற்பமாக விளங்கும் இவர் திருஉரு. ஆலீட நிலையில் ஒருகையை கதையின் மீது வைத்தும் மறுகையால் காவல் முத்திரை காட்டியும் மீசை முதலியவற்றுடன் தோற்றமளிக்கின்றார். இவ்வுருவத்துக்கு ஆண்டு தோறும் சாம்பிராணி தைலக்காப்பிட்டுச் சிறப்பு வழிபாடு செய்வர். இவரைப் போன்றதொரு வடிவம் மரத்தால் செய்யப்பெற்ற வாகனமாக இக்கோயிலில் உள்ளது, இவ்விடும்பவாகனத்தில் தைத்திங்களில் நடைபெறும் ஆண்டு விழா இரண்டாம் திருநாள் மாலை விழாவின் போது மெய்கண்டவேலர் எழுந்தருளி காட்சிதந்து அருள்வார்.

இடும்பன் கோயில் மண்டப முகப்பில் சுதையினால் ஆக்கப்பெற்ற யோக தண்டத்தின் மீது ஒரு கையும் மறு கையால் ஜபமாலை உருட்டிக்கொண்டுள்ள அகத்தியரின் திருஉரு உள்ளது. சிவபிரான் ஒரு காலத்தில் சிவகிரி, சத்யகிரி என்ற இரண்டு மலைகளை அகத்தியருக்கு அளித்தார். அவற்றை தென் திசைக்கு கொண்டுவர நினைத்த அகத்தியர் தனது மாணவனும், முன்பு சூரபன்மனுக்கு வில்லாசிரியனாய் இருந்தவனுமான இடும்பாசுரனிடம் அம்மலைகளை எடுத்து வருமாறு பணித்தார். இடும்பன் அம்மலைகளை ஒரு காவு தடியில் கட்டித்தூக்கி வந்தான். வழிநடை வருத்தத்தால் பழனிமலை அருகில் அம்மலைகளை இறக்கிவைத்தான். அவனுக்கு அருள்செய்ய நினைத்த முருகப்பிரான் சிவகிரி மீது சிறுவனாகத் தோன்றினார். கடம்பனை அறியாத இடும்பன் அவர்மீது கோபமுற்று போர்புரியத் துணிந்தான். அந்தப் போரில் கந்தபிரான் இடும்பனைக் கொன்றார். அவன் மனைவி இடும்பியின் முறையீட்டால் முருகன் இடும்பனுக்கு மீண்டும் உயிரளித்தார். மெய்யுணர்வு பெற்ற இடும்பன் திருமுருகப்பிரானிடம் நீர் எழுந்த்தருளியுள்ள திருக்கோயில்களில் நான் காவல் புரியும் தொண்டினை தந்தருள வேண்டும் என்றும், என்னைப்போல தூரத்தேயிருந்து வரும் அன்பர்கள் வழிபாட்டுப் பொருள்களை காவு தடியில் சுமந்து வருவார்களேயானால் அவர்களுக்கு அருள்புரியவேண்டும் என்று இரண்டு வரங்களை வேண்டிப்பெற்றான்.

இனி இவ் வெளிமுற்ற மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் இதைப்போல நீண்ட சதுரத்தில் முகப்பில் எழுதகத்துடன் கூடிய செங்கற்கலால் ஆன் வில் மச்சு மண்டபம் காணப்படும். இரண்டு பத்தியாக உள்ள இம்மண்டபம் மூல மூர்த்தியாகிய மெய்கண்ட வேலவர், உத்ஸவர் ஆகியோர் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களை ஒட்டி அவற்றின் முன்னே உள்ளதால் ஸ்நபன மண்டபம் என்று கூறுவர். இம்மண்டப வலப்புறத்தூண் ஒன்றில் புடைப்புச் சிற்பமாக இக்கோயிலைக் கட்டிய ஆனந்தரங்கப் பிள்ளையின் உருவம் செதுக்கப்பெற்ற கல் ஒன்று பதிக்கப்பெற்ருள்ளது. இத்தூணின் அருகே மெய்கண்டவேலவர் மீது திறப்புகழ் வேலாயுத சதகம் ஆகிய நூல்களைப் பாடிய அருட்கவி அழகுமுத்துப் புலவரின் செப்புத் திருமேனியைச் சிறு கோயில் கட்டி அதில் வைத்துள்ளனர். இம் மண்டபத்தின் வடபுறத்திலும் தென்புறத்திலும் திருச்சுற்றுக்குச் செல்ல கதவுகளோடு கூடிய பெரிய வாயில்கள் உண்டு, மூலவராகிய மெய்கண்ட வேலவரின் சன்னதிக்கு செல்லும் வாயிலின் இருபுறமும் காப்புச் செய்வோராகிய துவாரபாலகர்கள் நிற்கின்றனர். வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மகா மண்டப அர்த்த மண்டப அந்தராளங்களோடு கூடிய கருவறையில் மெய்கண்ட மூர்த்தி எழுந்தருளியுள்ளார். அவருக்கு எதிரே உள்ள மகா மண்டபத்தில் பலிபீடம், பிணிமுக யானை, வேலாயுதம் ஆகியவைகள் உள்ளன. இடது புறத்தில் உத்ஸவராகிய மெய்கண்டவேலவர் இளங்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார். இரு தேவியருடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள குன்றெறிந்த குமரனைக் கண்டமாத்திரத்தில் அடியார்கள் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்து நிற்கின்ற நிலையோ என் நினைக்கும் வண்ணம் உள்ளது. மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்து மினோ என்ற தொடரின் பொருளை இச் சன்னதியில் உள்ள விழாக்கொள்ளும் வேலவனைப் பார்த்தே அறியலாம்.

அடியார்க்கு நல்ல பெருமானாகிய விழாக்கொள்ளும் வேலவனைச் சுற்றி மற்ற பரிவார மூர்த்திகளாகிய உத்ஸவர்கள் எழுந்தருளியுள்ளனர். இரண்டு அம்மையுடன் மயில்வாகனத்தில் எழுந்தருளியுள்ள ஆறுமுகப்பெருமான், பாலசுப்பிரமணியர், விநாயகர், சண்டேஸ்வரர், வசந்த விழா, தேர்விழா ஆகியவற்றிற்குச் செல்லுகின்ற இரு தேவியருடன் கூடிய இருந்த கோல முருகன், பலி போடவும் நீரில் மூழ்க்கவும் செல்லும் அஸ்த்திரதேவர் ஆகியோரது செப்பு திருமேனிகளாகும். தென்புற வாயிலைத் தாண்டித் திருச்சுற்று வலம் வரச்சென்றால் முதலில் காணப்படுவது திருமடைப்பள்ளியாகும். அதன்பின் அத்திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் உள்ள விநாயகர் கோயிலைக் காணலாம். விநாயகர் கோயிலை ஒட்டிய மேற்புறத்திருச்சுற்றில் மதிள் ஓரமாக உயர்ந்த கருங்கல் குறட்டுடன் கூடிய நீண்ட மேடையின் மீது நந்தவனம் அமைத்துள்ளனர். வடபுறத்திருச்சுற்றில் மதிளை ஒட்டி செங்கற்கலால் இயன்ற திருமாளிகைப்பத்தி மண்டபம் உள்ளது. அதில் ஒரு சிறு சன்னிதியில் தெற்கு நோக்கியவாறு எண்திசைக்காவலர்களில் ஒருவரான (நிதியின் கிழவன்) குபேரன் வீற்றிருக்கின்றார். அவருக்கு அடுத்து இடதுபுறத்தில் உள்ள சன்னிதியில் ஒன்பான் கோள்களில் ஒருவரான் சனீஸ்வரர் தனது காக வாகனம் பின் நிற்க நின்று கொண்டிருக்கின்றார். இச்சன்னிதி வாயிலின் இருபுறமும் காப்புச் செய்வோர் போன்று கையில் சாமரைகளுடன் கூடிய கருங்கற்கலால் ஆன இரண்டு அழகிய பெண்ணுருவங்களும் இதைப்போல இருபுறமும் தூக்கிய துதிக்கைகளுடன் துதிக்கை ஒடிந்த நிலையில் இரண்டு கல் யானைகளும் காணப்படுகின்றன. இவை வேறொறு இடத்திலிருந்து இங்கு கொண்டுவந்து காட்சிப்பொருளாக வைத்திருக்கின்றனர் எனத்தெரிகிறது. ஒருகால் இவைகள் கார்முகேச்சுரர் கோயில் நன்னிலையில் இருந்த காலத்து அக்கோயில் திருச்சுற்று வட மேற்கு மூலையில் எழுந்தருளியிருந்த திருமகளின் இருபுறமும் உள்ள யானைகளோ, அத்திருமகளுக்கு இருபுறமும் உபசாரமாக சாமரை வீசிய பணிப்பெண்களோ என் ஐயுறும் நிலையில் உள்ளன். இதைப்போல இக்கோயிலின் மகா மண்டபத்தை அணிசெய்து கொண்டிருந்த தூண்களை நடந்த ஒரு திருப்பணியின் போது பிரித்தெடுத்துச் சென்று காயாரோகணசுவாமி கோயிலில் உள்ள பழனியாண்டவர் சன்னதி முக மண்டபத்தில் வைத்துக் கட்டியதாக அறிந்தோர் கூறுவர். அத்தூண் ஒன்றில் நடனகணபதியின் உருவம் ஒன்று செதுக்கப்பெற்றுள்ளது. அருட்திரு அழகுமுத்து புலவர் காலத்தில் இத்தூண்கள் மெய்கண்டமூர்த்தி சன்னதியை அணிசெய்து கொண்டிருந்தன. புலவரவர்கள் தான் பாடிய திறப்புகழ் பாவில் "கற்றூணிலாடிய ஐங்கரனார் துணை முருகோனே" எனப்பாடியுள்ளார். இவ்வாறு கோயிலில் உள்ள பொருள்களை எடுத்தும் புதிதாக தொடுத்தும் அவ்வப்போது நூதன திருப்பணிகள் பல நடந்துள்ளன எனத்தெரிகிறது. இனி இஸ் சனிபகவான் சன்னதியில் இடதுபுற வெளிச்சுவற்றில் ஒரு சிறு சதுரக் கல்லில் தோகைமயில் பின்நிற்க நின்ற கோலத்தில் திருமுருகனின் அவரின் இருபுறத்தே துவிபாஷிகளுக்கு உரிய உடைகளுடன் கூப்பிய கரங்களோடு இரண்டு கனவான்களது உருவங்களும் புடைப்பு சிற்பங்களாகக் காணப்படுகிண்டறன. இவை ஒருக்கால் இக்கோயிலை நிறுவிய ஆனந்தரங்கப் பிள்ளையும் அவரது உதவியாளருமாக இருக்குமோ என நினைக்குமாறு உள்ளன.

இனி இத்திருச்சுற்றில் மெய்கண்டமூர்த்தி கருவறைப் புறச்சுவற்றின் ஓரமாகச் சண்டீசர் எழுந்தருளியுள்ள சிறு கோயிலும் கிணறும் உள்ளன. முருகப்பிரானுக்கு அருகில் உள்ள இச்சண்டீசனை மித்ரசண்டன் என்று ஆகமங்கள் கூறும். இறுதியாக இத்திருச்சுற்றின் கீழ்புறம் உள்ள யாகசாலையைப் பார்த்துவிட்டுக் கோயிலை கடந்து வெளியே வந்தால் கிழக்கே வீதியை ஒட்டி கருங்கற்களாலான விமான அமைப்போடு கூடிய நாற்கால் மண்டபத்தைக் காணலாம். உச்சியில் தொங்கும் வாழைப்பூ கொடுங்கை மலர்ப்போதிகை ஆகிய சிற்ப நலங்களுடன் இம்மண்டபத்தூண்கள் விளங்க்குகின்றன. முன்னாளில் முருகப்பிரான் இம் மண்டபத்திற்கு எழுந்தருளி திரு ஊசல் விழாக்கொண்டதாக அறிந்தோர் கூறுவர். தற்போது தெரு சற்று உயர்ந்துள்ளதால் மண்டபக்குறடு பூமியில் புதையுண்டும் கோயிலின் உள்ளிடம் சற்றுப் பள்ளமாகவும் இருக்கின்றன. இக்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி ஒரு குறுந்தெரு தெற்கு வடக்காகச் செல்லும். இதை குமரர்கோயில் சந்து என்று அழைப்பர். கோயிலின் தென்புறமதிள் தெற்கு வீதியின் வடபுறச் சிறகாக அமைந்துள்ளது. மேற்புற வடமதிள்களின் வெளியே தற்போது புதிதாக கட்டி முடிக்கபெற்ற கல்யாண மண்டபமும் சகடங்கள் வைக்கும் தகரக்கொட்டகையும் உள்ளன. இக்கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ள இடத்தில் முன்பு ஓட்டு வில்லைகளால் வேயப்பெற்று சுற்றிலும் தாழ்வாரங்களோடு கூடிய செங்கற்களால் ஆன ஓட்டு மண்டபம் ஒன்று இருந்தது. ஆண்டுவிழா நாட்களில் ஓர் நாள் வேலவர் இம் மண்டபத்திற்கு எழுந்தருளி திருக்கல்யாணப் பெருவிழா கண்டருளியதாகக் கூறுவர். தற்போது இக் கட்டிடம் தகர்க்கக்ப்பட்டு விட்டது.

இக்கோயிலுக்கு ஓர் அழகிய சிறுரதமும் அதை அடக்கிக் கொண்டுள்ள ரத மண்டபமும் உள்ளன. மரத்தாலான தேர், முன்னாளில் இருந்து பின் அழிந்துவிட்டது. அது இருந்ததற்கு அறிகுறியாக இடிந்த நிலையில் செங்கற்களால் ஆன தேர் மண்டபம் அவ்வீதியின் கிழக்கே தென் சிறகில் உள்ளது. இத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மெய்கண்ட மூர்த்திக்கு நாள்தோறும் ஐந்து கால பூசைகள் உண்டு. ஆண்டு விழாவாகிய சிறப்புவிழா தைத்திங்கள் நிறைமதி வேளையில் பூசை நாளை முன்னிட்டுப் பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் வேலவர் பலவித ஊர்திகளில் எழுந்தருளி உலாவருவார். ஐப்பசித் திங்களில் கந்தர்சஷ்டிவிழா பத்து நாட்கள் நடைபெறும். சூரசம்ஹாரம், வள்ளி தேவசேனைக் கல்யாணம் ஆகியவை சிறப்பு விழாக்களாகும். இவ்விழா நாட்களின் முடிவில் நீலாயதாட்சி அம்மன் வடக்கு வீதியில் உள்ள கோதண்ட ஐய்யனார் கோவில் குளத்திற்கு வேலவர் எழுந்தருளி நீராட்டுவிழா நிகழ்த்தி அருள்வர். புரட்டாசி நவராத்திரி விழா நாட்களில் முருகன் எழுந்தருளி நாற்கால் மண்டபத்தைச் சுற்றி பக்தி உலா நிகழ்த்துவார். கார்த்திகை மாத திருக்கார்த்திகை விழா, அருட்கவி அழகுமுத்துப் புலவர் இறையருளில் கலந்த சித்திரைச் சதயநாள் விழா, மாசி மக நாளில் கடற்கரைச் சென்று அங்கே கடல் நீராட்டு விழா, இன்னும் சிவராத்திரி விழா போன்ற சைவ விழாக்கள் ஆகிய மாத விழாக்கள் முறைப்படி நடைபெறுகின்றன. இதைத்தவிர ஒவ்வொரு மாத கார்த்திகை தோறும் காலையில் மூலவருக்கு அபிஷேக ஆராதைனைகளும் உத்ஸவரை வசந்த மண்டபத்திற்க்கு எழுந்தருளச் செய்து திருமுழுக்காட்டி அங்கே சோடச உபசாரங்களோடு தீப ஆராதனைகளும் நடத்துவர். மாலையில் உத்ஸவர் கேடய சப்பரத்தில் எழுந்தருளித் திருவீதி உலா வருவார்.

 இவ்வாறு நாளும் நடைபெறும் கோலாகல பூசையும் சீர்பாத சேவையும் கண்டு தினமொரு சாத்துப்படி அழகன் திரு அருளைப்பெற விரைந்து வாருங்கள்.

      தலவரலாறு முற்றிற்று

 

 

 Home Contact